Friday, February 25, 2011

கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!

 r

சீமானுக்கு பிரபாகரன் அறிவுரை... கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!

சென்னை: முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி போன்ற தலைவர்களை தாக்கிப் பேசி வருத்தம் கொள்ள வைக்காதே என்று எனக்கு அறிவுரை கூறினார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

இதுகுறித்து, ஜூனியர் விகடன் புலனாய்வு இதழில் சீமான் எழுதியிருப்பதாவது:

"
கடந்த ஜூலை 10-ம் தேதி... மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு வந்தேன். காவல்துறையில் இருக்கும் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.

''அடிபட்ட மீனவர்களில் ஒருவராக நீங்கள் அலறியதுபோல் இருந்தது உங்கள் பேச்சு. அதேவேளை, அரசு வேறு விதமாக யோசிக்கிறது. உங்களின் பேச்சைவைத்து மீள முடியாத அளவுக்கு வலுவான வழக்காக இருக்கும். என்ன காரணத்தினாலோ, முதல்வர் உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். நீங்கள் அவரைப்பற்றி ஆவேசமாகப் பேசுவதை எல்லாம், அவர் கவனத்துக்குக் கொண்டுபோய் சேர்த்து இருக்கிறார்கள். முதல்வரின் கோபத்தைத் தணிக்கும் விதமாக வழக்குகளைப் போட வேண்டும் என்பதுதான் உளவுத்துறையின் உத்தேசம்!'' என்றார் அந்தக் காக்கி நண்பர்.

அவர் மட்டும் அல்ல... அரசியலில் இருப்பவர்கள் தொடங்கி என் அடிமட்ட அபிமானிகள் வரையிலான பலர் என் மீதான அக்கறையிலோ... இல்லை எச்சரிக்கும் தொனியிலோ... ''அவரைப்பற்றிப் பேசும்போது மட்டும் அதிகமாகத் தாக்காதீர்கள்...'' என்பார்கள்!

எனக்கு அறிவுரை வழங்கும் இந்த அன்பர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இவர்கள் சொல்லும் அறிவுரையை, அறவுரையாக ஏற்கெனவே எனக்கு இன்னொருவர் சொல்லி இருக்கிறார்.

முதல்வர் கலைஞரையோ, காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றியோ பேசும்போது சொல்ல வேண்டிய கருத்துகளை மட்டும் சொல்லுங்கள். ஆவேசமோ... ஆத்திரமோ... கொள்ளாதீர்கள். விமர்சனங்கள் வைக்காதீர்கள். அது சம்பந்தப்பட்டவர்களை மனரீதியாய் வருத்தம்கொள்ள வைத்துவிடும்!'' எனச் சொன்ன அந்த நபர் யார் தெரியுமா?

யாரை என் வாழ்வியல் வடிவமாக... யாரை என் நெஞ்சத்து நெருப்பாக... யாரை என் நாடித் துடிப்பின் நரம்பாக நினைக்கிறேனோ... அந்தத் தமிழ்த் தேசியத் தலைவன் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள் இவை!

ஈழ மண்ணில் கால்வைத்து, என் நெஞ்சத்து நாயகனை சந்தித்த திருநாளில், அவர் என் புத்திக்குள் ஏற்றிய போதனை இது. குருதியாறு ஓயாத - கொந்தளிப்பு அடங்காத அந்த மண்ணில், எதிரியையும் மதிக்கத்தக்க மாண்புகொண்டவனாக எம் தலைவன் இருந்தது, ஆத்திரத்தோடு அலையும் இந்த உலகத்தின் ஆச்சரியம்!

''பேச்சும் ஒரு ராணுவம்தான். எங்கள் துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் தோட்டாக்களைவிட, உங்களின் வார்த்தைகள் வல்லமை வாய்ந்தவை. அதனால், தரம் தாழ்ந்த பேச்சு உங்களுக்குத் தேவை இல்லை. மூன்றாம்தர அரசியலில் நீங்களும் ஒரு ஆளாக உருவெடுத்துவிட வேண்டாம்!'' என என் தலைவன் தட்டிக்கொடுத்துச் சொன்ன வார்த்தைகளைத்தான் தடம் மாற்றும் மந்திரங்களாக ஏற்றுக்கொண்டு தமிழகத்துக்கு வந்தேன்.

ஈழத்தில் போர் தீவிரம் எடுத்து கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்தழிந்த நேரம்... தமிழ்த் திரையுலகம் ஏற்பாடு செய்து இருந்த இராமேஸ்வரம் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழ விவகாரத்தின் உண்மைகளை உரக்கச் சொன்னேன். அவை இறையாண்மை மீறலாகக் கையில் எடுக்கப்படும் என நான் எண்ணவில்லை.

ஆனால், ராமேஸ்வரம் போராட்டத்தை நேரலையில் பார்த்த தலைவர் பிரபாகரன், ''என்னைய தலைவன்னு சொல்லலைன்னா இப்போ என்ன? அந்த ரெண்டு பேருக்குமே என்னையப் பிடிக்காதே... இந்தளவுக்குப் பேசிய சீமானை வெளியே விட்டு வெச்சிருப்பாங்களா?'' எனச் சொன்னாராம். ராமேஸ்வரம் கூட்டம் முடிவதற்குள்ளேயே தலைவரின் கருத்தை என்னிடம் அலைபேசியில் சொன்னார் நடேசன் அண்ணா.

அடுத்த சில நாட்களிலேயே ராமேஸ்வரம் விவகாரத்தில் என் மீதும், அமீர் மீதும் வழக்குப் போடப்பட... "இதைத்தான் நான் அப்போதே சொன்னேன். ஆனாலும், பரவாயில்லை. அவனுக்கு யாரும் ஆறுதலோ தேறுதலோ சொல்ல வேண்டியதில்லை. என் தம்பி புலிபோல் சிறைமீண்டு வருவான்!'' எனச் சொல்லி இருக்கிறார் தலைவர்.

இங்கே பேசப்படும் வார்த்தைகளுக்கு என்ன விளைவு நடக்கும் என்பதை அங்கே இருந்தபடியே அனுமானித்த தலைவரின் முன்யோசனை இன்றைக்கும் என்னை சிலிர்க்க வைக்கிறது.

போர்க் களத்தில் இருந்தபடியே தமிழக அரசியல் கள நிலவரங்களை அறிந்த புலித் தளபதிகள் அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு பேசுவார்கள். ''தலைவரை நினைத்து கவலைப்படாதே... எங்களின் துயரங்களை நினைத்து தமிழகத்தில் இருப்பவர்களை விமர்சிக்காதே... கவனம்... கவனம்...'' என ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அறிவுறுத்தும் அண்ணன் சூசை, கடைசிக் கட்ட போர் முனையில் இருந்தபடி என்னைத் தொடர்புகொண்ட கடைசிப் பேச்சு, நினைக்கும் போதெல்லாம் நெஞ்சைக் கிழிக்கக்கூடியது.

கடற்புலி சூசையின் கடைசி குரல்... 

ஈழத்தின் துயரமான திசை மாற்றம் என்னை எல்லா விதத்திலும் இயலாமைக்காரனாக மாற்றிப்போட்டு இருந்த நேரம்... சூசை அண்ணனிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பை தம்பி ஒருவன் எடுத்திருக்கிறான். ''சாவின் விளிம்பில் நிற்கிறோம்டா தம்பி... நான் பேசுவதைப் பதிவுசெய்து தம்பி சீமானிடம் கொடு. திரும்பிய பக்கம் எல்லாம் எங்கட சனங்கள் செத்துக் கிடக்குறாங்க. இதுவே என்னுடைய கடைசிப் பேச்சாக இருக்கலாம். எல்லோரும் தைரியமாக இருங்கள்...'' எனச் சொல்லி இருக்கிறார்.

அப்போது என் சார்பாக பேசிய தம்பி தாங்க முடியாமல் அழ, ''அழக் கூடாது. தைரியமா இருக்கணும். தமிழன் அழக் கூடாது. அழுதால் இனி என்னிடம் பேசாதே...'' எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அந்தப் பேச்சின் பதிவை இப்போது கேட்டாலும், அவர்களின் நெஞ்சுறுதியும் நிலைகுலையாத் தைரியமும் கண் முன்னே வந்துவிட்டுப் போகின்றன.

சூசை அண்ணனின் சொல்படி யாரையும் விமர்சித்துப் பேச எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனால், இந்த அன்னை மண்ணில் நடக்கும் அக்கிரமங்களையும் கேலிக்கூத்துகளையும் பார்த்தால்... கிறுக்குப் பிடித்தே செத்துவிடுவேன் போல் இருக்கிறது.

தம்பிகளே! ராஜபக்சேவின் போர்க் குற்றத்தை விசாரிக்கக் கோரி உலக நாடுகளே ஒருசேரக் குரல் கொடுக்கையில், சொந்த இனத்துக்காக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட நம் முதல்வருக்கு தெம்பில்லாமல் போய்விட்டதா?

சுட்டு விளையாட ஈழ உயிர்கள் இல்லாது போனதால், மீனவர்களை விரட்டும் சிங்கள கடற்படையைக் கண்டிக்க இந்த வக்கற்ற மண்ணில் யாருக்குமே வாய் இல்லையா?

ஈழப் போர் துயரமான முடிவாக அமைந்த வேளையிலும், தொப்புள் கொடி உறவாகத் துடிக்க வேண்டிய தமிழகத் தலைவர், 'சகோதர யுத்தம்... சகோதர யுத்தம்� என்றே திரும்பத் திரும்பச் சொல்லி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாரே... இந்தக் குரூரத்தை எப்படி ஐயா பொறுப்பது?

பிரபாகரன் நிகழ்த்தியது சகோதர யுத்தம் என்றால், தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது என்ன சகோதர முத்தமா? இதைக் கேட்டால், உங்களுக்குப் பொத்துக்கொண்டு வருகிறதா கோபம்?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்...

அவர் வீட்டில் சோதனை... இவர் வீட்டில் விசாரணை... எனத் தமிழகமே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கையில், தமிழக டி.ஜி.பி. மூலமாக அதிமுக்கிய அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிடவைத்து இருக்கிறீர்கள். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரைக் கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லி, இழவு வீட்டிலும் இடி பாய்ச்சி இருக்கிறீர்களே... உங்களின் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நிஜமாகவே புலிகளால் உங்களுக்கு ஆபத்து இருக்கிறதா?

பிச்சைக்காரர்கள் இல்லை... பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை... இச்சைக் கேடுகள் இல்லை... இரவானால் பயம் இல்லை... என உங்களாலோ, உலக மகா தலைவர்களாலோ நடத்திக் காட்ட முடியாத நாட்டின் தலைவனாக இருந்த எங்கள் பிரபாகரன்... உங்களைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்கிறாரா?

கோழைகளை புலிகள் கொல்வதில்லை!

என்ன பின்னணி..? காலம் காலமாக உங்களின் தந்திர - எந்திர விளையாட்டை சகித்துவரும் எங்களை மேற்கொண்டும் நீங்கள் குழப்ப வேண்டாம் மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு நாதியற்று அலையும் புலிப் படையின் மீது பழி போட்டு, உங்களின் பழி பாவங்களைப் பதுக்கப் பார்க்கிறீர்களே... 'புலிகளால் ஆபத்து! என மத்திய உளவுத் துறை அபாயம் பாடியதாகச் சொல்லி ப.சிதம்பரம் வீட்டுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறீர்கள்... பிரதமரின் விழாவுக்குப் பெருவாரியான கண்காணிப்புகளை மேற்கொள்ளச் சொல்லி இருக்கிறீர்கள்... தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருக்கிறதா எனத் தீவிரமாக தேடச்சொல்லி இருக்கிறீர்கள்.

நாடாளும் தலைவர்களே... உங்களின் பதற்றத்தைத் தணிக்க... படபடப்பை அடக்க... பாதுகாப்பை உறுதி செய்ய... ஒரே ஒரு விஷயம் சொல்லவா... 'கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!'

-இவ்வாறு சீமான் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment