Wednesday, November 26, 2014

உதடுகள் உச்சரிக்கட்டும்!

என் இறைவனே சாயி பாபா!
என் மீது கருணை காட்டுங்கள் பிரபு! எத்தனை விதமான துன்பங்கள் என்னை சூழ்ந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்து எனக்கு உதவி செய்யுங்கள்.
கவலைகளாலும் துன்பத்தாலும் கடனாலும் அவமானத்தாலும், அலட்சியப்படுத்தப்படுவதாலும், புறக்கணிக்கப்படுவதாலும் நொந்து நைந்துபோன இதயத்தை மட்டுமே வட்டும் ஒட்டும் போட்டு வைத்திருக்கிறேன். இதை எனது அர்ப்பணமாக ஏற்றுக்கொண்டு உதவி செய்யுங்கள் பிரபு!
என் தன்னம்பிக்கை தடுமாறுகிறது, நான் நிலைகுலைந்துவிடுவேன் என மற்றவர்கள் என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள்.
மனம் சொந்து, மனம் சோர்ந்து போயிருக்கிறேன். என் குடும்பத்தின் நிம்மதி பறிபோய்விட்டது. நாங்கள் ஒரே வீட்டில் தனித்தனியாக இருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு மகிழ்ச்சியோடு பேசிக் கொண்ட நாட்கள் மாதங்களாகி விட்டன.
என் கையை வைத்தே கண்களை குத்தச் செய்த நிகழ்வுகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். தூரத்தில் உள்ளவர்களாலும், அருகில் இருப்பவர்களாலும் ஆபத்தினருகில் தள்ளப்பட்டிருக்கிறேன்.
கடனாலும், தடையாலும், தோல்வியாலும் துவண்டு போன நிலையிலிருக்கும் என்னை கண்ணெடுத்துப் பாருங்கள் என் கடவுளே! என்னால் வளர்க்கப்பட்டவர்களும், என் உதவிக்காகக் காத்திருந்தவர்களும் என்னைப் புறக்கணித்தார்கள். நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றினார்கள்.
என்னை உண்மையாக நம்பியவர்களும் இப்போது தடுமாறுகிறார்கள். எனது நம்பிக்கை இழந்து போகும் செய்திகளால் நான் கவலைப்படுகிறேன், தேற்றுவார் யாருமின்றி தத்தளிக்கிறேன்.
போற்றியவர்கள் தூற்றவும், நம்பியவர்கள் விலகவும், விரும்பியவர்கள் வெறுக்கவும் ஏற்ற சூழல்களை உருவாக்கிவிட்டார்கள்.
விரோதிகள் ஆயுதங்களோடு காத்திருக்கிறார்கள், துரோகிகள் நான் வரும் வழியில் பள்ளம் தோண்டி, அதை இலைகளால் மூடி மறைத்து என்னை வீழ்த்திட பதுங்கியிருக்கிறார்கள்.
ஆபத்தில் கதறிக் கூப்பிட்ட கஜேந்திரனைப்போலக்கூட கத்த முடியாமல், துக்கத்தால் அடைபட்ட தொண்டையுடன் மனதுக்குள் கதறுகிறேன்.
என் இறைவனே சாயி நாதா! என்னை கைவிட்டு விடாதீர்கள்.
பூர்வங்களில் உங்களோடு இருந்ததையும், உங்கள் நாமத்தை இடை விடாமல் உச்சரித்துக்கொண்டிருந்ததையும் மறந்துவிடாதீர்கள். நான் உங்களையே எனது பலமாகக் கொண்டிருக்கிறேன். என்னை தாக்க வருவோருக்கு உங்களையே கேடயமாகக் காட்டி என்னை காப்பாற்றிக்கொள்ள முனைகிறேன்.
எல்லோரும் கைவிட்டாலும், பெற்றோர், உடன் பிறந்தோர் வெறுத்து ஒதுக்கினாலும் என்னை மாறாத அன்புடன் நேசித்து உதவி செய்கிறவர் நீங்கள் என்பதை பிறருக்குத் தெரியபடுத்துங்கள்.
தங்களுக்கு நன்மை நடப்பதற்காக என்னைத்தேடி வருவோருடன் எனக்காக நீங்கள் இருப்பதையும், எனது விரோதிகள் என்னை நெருங்காமல் இருக்க அவர்கள் மத்தியில் எனது சார்பாக இருப்பதையும் பிறர் உணரும்படி செய்யுங்கள்.
எனது உழைப்பையும் அதன் பலனையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட என்னோடு இருந்து கொண்டே எனக்கு எதிராகச் செயல்படுகிறவர்களிடமிருந்து என்னை நீங்கள் காப்பாற்றுவதை பிறர் உணர்ந்துகொள்ளட்டும்.
என்னை நிர்க்கதியாக்கி தனிமையில் விட்டு, எனது சோகமுடிவுக்காக காத்திருப்பவர்கள் ஏமாந்து போகட்டும். மந்திரத்தாலும் தந்திரத்தாலும் என்னை மயக்கி கொள்ளையிடவும், கொல்லவும் முனைகிறவர்கள் கண்களுக்கு என்னை மறைத்து, மந்திர தந்திரக் கட்டுக்களில் இருந்து என்னை விடுதலை செய்யுங்கள்.
என்னுடைய மலை போன்ற பிரச்சினைகளையும் தோள் மீது சுமந்துகொண்டு, வலது கரத்தைப் பிடித்து நீங்கள் என்னை வழிநடத்துவதை மற்றவர்கள் அறிந்துகொள்ளட்டும்.
துக்கமான நாட்களிலும், சோகமான நேரங்களிலும் நான் உங்கள் நாமத்தையே உதடுகளால் உச்சரித்துக்கொண்டு இருக்கிறேன். எமனும் பயப்படுகிற உங்கள் திருப்பெயரின் சக்தி முன்பு எனது கஷ்டங்கள் நிற்காது என்பதை நான் உணர அருள் செய்யுங்கள்.
எல்லோரும் தங்கள் செல்வங்களால் உங்களுக்கு சேவை செய்து, மகிழ்ச்சியால் துதிக்கிறார்கள், தங்கள் முதற்பலனை காணிக்கையாகத் தருகிறார்கள். இந்த ஏழையிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்?
உண்ணும் ஒவ்வொரு பருக்கையும், பருகும் ஒவ்வொரு துளி நீரும் நீங்கள் எனக்கு அளிக்கிறீர்கள். நீங்கள் தருவதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் கைகளில் என்னை ஒப்படைக்காதீர்கள்.
எனது புலம்பல்கள் பாடல்களாகவும்,எனது அனுபவங்கள் பிறருக்குக் கீர்த்தனைகளாகவும் அமையட்டும். நிலைத்த பக்தியும் நீடித்த பொறுமையும், கடுமை காட்டாத முகமும், புறங்கூறாத இதயமும் எனக்குத்தந்தருளும். என்றென்றைக்கும் உங்களுக்காகக் காத்திருக்கிற கண்களைத் தந்தருளும்..
நீங்களே எனது புகலிடம் என்பதை மற்றவர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் எனக்குள் மாற்றத்தைத் தாருங்கள் சாயி நாதா!
இந்தப் பிரார்த்தனைகளோடு தங்கள் திருவடிகளை சரணடைகிறேன்.
ஜெய் சாய்ராம்.

No comments:

Post a Comment