ஸத்குரு என்பவர் யார்?
ஒருவரது மரபுரிமைப் பிழைகளை அவரது கவனத்திற்குக் கொண்டுவந்து, உடல், உயிர், உலகம் இவை யாவும் ஒன்றினை ஒன்று தொடர்புடையவை என்பதை அறியவைப்பவரே சத்குரு ஆவார்.
மனிதன் அவனது மனத்தின் காரணமாகவே மகிழ்ச்சி, துயரம் இரண்டையும் கலந்து அனுபவிக்கிறான். தானே "ஜீவன்" என்று உணர்ந்து தனது அஹங்காரத்தின் மேலீட்டால் மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். இந்த உணர்வே மனிதனிடம் பிழைபட்டதாக உருவாகியுள்ள மாயை ஆகும். இது மனிதன் மனத்தில் தோன்றும் அறியாமை ஆகும்.
இந்த அறியாமையிலிருந்து விடுபட மனிதர்கள் தாமாகவே முயற்சிசெய்து, அதன் ஆணிவேரைப் பிடுங்கி எறிவதற்கு அவன் "சுயவிசாரணை" நடத்தத் துவங்க வேண்டும்.
இந்த அறியாமை எப்படி உண்டாகிறது? அது எங்கு உள்ளது? இதை உணர்த்துவதுதான் குரு உபதேசம்.
இதையும் தாண்டி, சத்குருவானவர், அவனது பல பிறவிகளின் அழுக்குகளையும் அவற்றின் அச்சுகளையுமே ஒரே நொடியில் விலக்கி அல்லது அழித்து, தனது பக்தனைப் பரிசுத்தமடையச் செய்கிறார்.
மனிதன் தனது அறியாமை என்னும் கணக்கைச் சரிபார்க்கத் தவறும் போதுதான். அவன் வாழ்க்கை முழுவதும் துன்பத்திலும் துயரத்திலும் அல்லலுறுகிறான்.
மனிதன் தனது வாழும் காலத்திலேயே தனது பூர்வ ஜென்மக் கணக்குகளையும் சரிபார்த்து, எவ்வளவு தூரம் அவற்றைக் கழிக்க முடியுமோ அவ்வளவு தூரம் கழித்துவிட்டுச் சென்றுவிட வேண்டும். மிச்சம் சொச்சத்தை அடுத்துவரும் பிறவிகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. அஞ்ஞானம் என்பது,
1. நான் ஒரு ஜீவன் (உயிர், ஜந்து) என்று நினைப்பது.
2. உடம்பே ஆத்மா (நானே உடல் என்பது)
3. கடவுள், உலகம், ஜீவன் இவை எல்லாம் வெவ்வேறானவை
4. நான் கடவுள் அல்ல.
5. உடல், ஆத்மா என்று எதுவும் இல்லை என்று நினைப்பது அல்லது அந்த உண்மையை அறியாமல் இருப்பது.
6. கடவுள், உலகம், ஜீவன் இவையெல்லாம் ஒன்று என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருத்தல்.
2. உடம்பே ஆத்மா (நானே உடல் என்பது)
3. கடவுள், உலகம், ஜீவன் இவை எல்லாம் வெவ்வேறானவை
4. நான் கடவுள் அல்ல.
5. உடல், ஆத்மா என்று எதுவும் இல்லை என்று நினைப்பது அல்லது அந்த உண்மையை அறியாமல் இருப்பது.
6. கடவுள், உலகம், ஜீவன் இவையெல்லாம் ஒன்று என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருத்தல்.
இவ்வாறான அஞ்ஞானங்களை, அறியாமைகளைப் பிழைகள் என்று ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
குருவானவர், நமக்குப் பிறவிக் கடலை நீந்திக் கரைசேர வழிகாட்டுகிறார். ஆனால், சத்குருவோ நம்மைக் கரைக்கே கொண்டு சேர்த்துவிடுகிறார். அப்படிப்பட்ட சத் குருவானவர், மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி என்ற குக்கிராமத்தில் பல வருடங்கள், பக்கிரிபோல வாழ்ந்துவந்தார். அவர், தன்னை நாடிவந்த பலருக்கும், உணவளித்து உறைவிடம் தந்து, நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து, இன்னும் சிலரை உய்வித்து, இவ்வுலகில் இயற்கையில் கலந்து, ஸர்வ வியாபியாக இன்றும் மக்களிடையே சேவை செய்துவருகிறார்.
சத்குரு என்பவர் தனது பௌதீக உடலை நீக்கிய பிறகும், தொடர்ந்து மக்கள் நலனில் கருத்துக் கொண்டு செயலாற்றிக்கொண்டிருப்பவர் ஆவார். இப்படிப்பட்ட சத்குருவினை நாம் எப்போதும் நினைத்துக்கொண்டே இருந்தால், நமது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றன. மரணம் தனது கொடுமையைத் தளர்த்திவிடுகிறது. இவ்வுலக வாழ்வில் நமது துயரங்கள் நீக்கப்படுகின்றன. ஆகவே, தங்கள் நலத்தை விரும்புவோர் ஷீரடி சாயிபாபா போன்றோரின் சத்சரிளதைகளைத் தினமும் படித்துக்கொண்டே வர வேண்டும்.
ஷீரடி சாயிபாபா எங்கு, எப்போது, யாருடைய மகனாக பிறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. அவரும் தனது பூர்வீகத்தைப் பற்றிய எந்த விபரத்தையும் யாருக்கும் எப்போதும் தெரிவித்தது கிடையாது. அதைத் தெரிந்துகொள்ள யாரும் முயற்சிக்கவும் இல்லை. அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஷீரடி என்னும் கிராமத்தில் வாழ்ந்திருந்தார். 1918ஆம் வருடம், அக்டோபர் 17ஆம் தேதி பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தமது பௌதீக உடலை நீத்துவிட்டு, தனது சூக்ஷ்ஷம உடல் வாயிலாக இந்த நிமிடம் வரை, தனது பக்தர்களிடம் உலாவந்து, அவர்களைக் காத்துவருகிறார்.
ஷீரடி சாயிபாபா தன் காலம் முழுவதும் மருத்துவராகவே இருந்து தனது மக்களுக்கு அருள்பாலித்து இருக்கிறார். இவரது சூஷ்க்ஷம சக்தி இந்த அண்டசராசரத்திற்கு அப்பாலும் பரவியிருப்பதால்தான், இன்றும் பூவுலகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சத்குருமார்கள் பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவதரிக்கிறார்கள். அவர்களை அண்டி, சராசரி மனிதர்கள் தமது பூர்வ ஜென்ம பாபங்களைக் கழுவிக்கொண்டு இருக்கும் காலத்தில் நாம் தெரிந்தே செய்த பாவங்களையும் கழுவிக்கொண்டு, நம் மனது, அறிவு, ஆன்மா என அனைத்து சங்கதி களையும் சுத்தப்படுத்திக் கொண்டு, பிறவிக் கடலைக் கடந்து கடைத்தேற வேண்டும்.
ஷீரடி பாபா ஸர்வவியாபியாக இருந்தார். இப்போதும் அப்படியே இருக்கிறார். அவர் சகல ஜீவராசிகளையும் நேசித்தார். எல்லா ஜீவராசிகளிடத்தும் ஆத்மா இருப்பதைக் கண்டவர். வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்கியவர். மனிதர்களிடம் இரக்கம் கொண்டவர்.
தான் வெளிப்படையாக ஒரு பக்கிரியைப் போல வாழ்ந்தவராயினும், அவரது ஆன்மா எல்லா உயிர்களிடையேயும் சென்று வாழ்கிறது என்பது உண்மை.
ஞானிகள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக இவ்வுலகிற்கு வருகைதருகிறார்கள். அது நிறைவேறியபின் அவர்கள் வந்த மாதிரியே அமைதியாகவும் எளிதாகவும் இயற்கையுடன் இரண்டறக் கலந்துவிடுகின்றனர்.
இன்றளவும் ஷீரடி சாயி ஸர்வலியாபியாகவும், தான் வாழ்ந்த ஷீரடி கிராமத்தின் ஜீவ நாடியாகவும் வாழ்ந்துவருகிறார்.
ஒவ்வொரு யுகத்திற்கும் யுகதர்மம் என்று ஒன்று உண்டு. அதில் கலியுகத்தில் "தானம்" செய்வது யுகதர்மமாகக் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தேவையான மிகக் குறைந்த அளவுபொருட்களை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ளதைப் பிறருக்குத் தந்துவிட வேண்டும். யாரிடம் இப்படிப்பட்ட யுகதர்ம நீதி சார்ந்த எண்ணம் உள்ளதோ அவர்களிடம் ஷீரடி சாயி நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார்.
ஷீரடி சாயிபாபா, தமக்கு என எதையும் வைத்துக்கொள்ளாமலேயே, கிடைத்தவற்றை வந்தவருக்கெல்லாம் வாரி வழங்கிவிட்டார்.
துணி, பணம் முதலியனவற்றைத் தானம் செய்ய நாம் யோசிக்க வேண்டும். ஆனால், அன்ன தானம் செய்ய, அப்போது நம்மிடம் உள்ள உணவைப் பிறர் பசியாற்றி, நாமும் உண்ணும்போது நம் மனது நிறைவடைகிறது. இதைத்தான் ஸாயி விரும்பினார். நாமும் தினமும் பசியுள்ள ஒரு மனிதனுக்கோ அல்லது ஜீவராசிக்கோ உணவளித்து, நமது சத்குருவான, ஸர்வவியாபியான சாயி பாபாவை நம்முடனே தக்கவைத்துக் கொள்வோம்.
ஞானிகளும் சத்குருவானவர்களும் தமது பௌதீக உடலிலிருந்து, புலன்களுக்கு அப்பாற்பட்ட சூஷ்ம சக்தியால், தமது பக்தர்களின் மனத்தில் ஊடுருவும் தன்மையைப் பெற்றுள்ளனர். பக்தர்கள், இவர்களைச் சரணாகதியடையும்போது, அந்த சூஷ்ம சக்தியை அவர்கள் செயல்பட வைக்கிறார்கள். இதனால், பக்தர்களின் நோய்தீர்த்தல், மனத்துன்பம், துயரங்களைப் போக்குதல், போன்ற அனைத்துக் காரியங்களையும் அவர்கள் முடித்துத் தருகிறார்கள்.
இவர்கள் பௌதீக உடலம் இவ்வுலகிலிருந்து நீங்கிய பின்பும், அதே அளவும் அதைவிட மேலேயும், எப்போதும் போலச் செயல்படும் மகான்களே ஞானிகளும் சத்குருவானவர்களும் என்பதை நாம் சாயிசத்சரிதம் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஷீரடி சாயி தனது வாழும் காலத்திலும் பிறகும் பல நல்ல செயல்களைச் செய்து வருகிறார். 2018ஆம் வருடம் ஷீரடி சாயிபாபா மறைந்து நூறு ஆண்டுகளைத் தொடும் வருடமாகும்.
பாபா சில வருடங்கள் இப்பூவுலகில் இருந்தாலும், அவர் புகழ் திக்கெட்டும் பரவிக்கிடந்தது. அவரை, வண்டுகள் போல பக்தர்கள் மொய்த்தனர். இன்னும் ஷீர்டி பாபா பலரைத் தன்வசம் இழுத்துக்கொண்டிருக்கிறார். நாளக்கு நாள் ஷீரடி நோக்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
பாபாவின் துனி (நெருப்பு) நமது பாபங்களைப் பொசுக்கும் நெருப்புக் குண்டமாகும். அதிலிருந்து கிடைக்கும் விபூதி (யுதி) நமக்கு நோய்தீர்க்கும் மருந்தாகும். ஷீரடி பாபாவின் மகிமைகளைக் கேட்டு, ஆங்காங்கே மக்கள் பாபாவின் கோயில் தலங்களை உருவாக்கி வருகின்றனர். எங்கெல்லாம் பாபாவை மக்கள் மனமுவந்து, மனமுருகி ஏற்றுக்கொள்கிறார்களோ அங்கெல்லாம் அவர் உடனே வந்து தன் மக்களைப் பாதுகாக்கின்றார்.
"அல்லா மாலிக்" என்று இறைவன் ஒருவனே என்ற அத்வைதத் தத்துவக் கொள்கைகளைத் தனது வாழ்வில் வாழ்ந்து காட்டிய மகான் ஷீரடி பாபா என்பதில் ஐயமில்லை.
உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் ஆத்ம பாவனையுடன் நாம் காணப் பழகும்போது, வேற்றுமைகள் மறைந்துவிடுகின்றன. இந்த அத்வைத, ஆத்மபாவனையே பிராமணனை இன்னமும் இவ்வுலகில் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, பிரம்மஞானத்தை வேண்டியும் பர தத்துவத்தைத் தரிசித்தும், நமக்கு வழிகாட்டிகளான ரிஷிகள், முனிவர்கள், ஞானிகளைப் பின்பற்றியும் எல்லாவற்றையும்விட, எளிமையாக நாடி, நமது பாவங்களைக் கழுவி நமது ஆத்மாவை ஒளிபெறச் செய்யும் சத்குருவான ஷீரடி பாபாவைத் தினமும் தொழுது நமது வாழ்நாளிலேயே நமது கர்மாக்களைத் தொலைத்து, பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரை சேர்வோமாக!
கட்டுரையாளர்:
திருமதி. பாகீரதி இராமனாதன்
கட்டுரை ஆதாரம்: சாயிசத் சரிதம்
கட்டுரை ஆதாரம்: சாயிசத் சரிதம்