Saturday, August 2, 2014

அன்பர் ஒருவரின் கேள்வி: கோபம் என்பது என்ன ?

சிக்கலான சந்தர்ப்பங்களில் பொறுப்போடும் அதே சமயம்
சாந்தமாகவும் ஒன்றிணைந்தவனாகவும் இருப்பது எப்படி ?
ஓஷோவின் பதில்: கோபத்தின் மனோதத்துவம் என்னவென்றால் நீ எதையாவது
விரும்புகிறாய், நீ அதை பெறுவதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள், நீ அதை பெறுவதை
தடுக்கிறார்கள், ஒரு தடங்கலாக இருக்கிறார்கள். உனது சக்தி முழுமையும் ஒன்றை பெற
விரும்புகிறது, யாரோ அந்த செயலை தடுக்கிறார்கள். நீ விரும்பியதை பெற முடியவில்லை.
அந்த விரக்தியடைந்த சக்தி கோபமாக மாறுகிறது. உன்னுடைய ஆசை பூர்த்தியடையக் கூடிய சாத்தியக்கூறை அழித்த மனிதர் மேல் கோபம் வருகிறது. உன்னால் கோபத்தை தடுக்க முடியாது. ஏனெனில் கோபம் ஒரு தொடர் விளைவு, பின் விளைவு. ஆனால் அந்த பின் விளைவு நிகழாமல் இருக்க நீ ஏதாவது செய்யலாம்.
வாழ்வில் ஒன்றை மட்டும் நினைவில் கொள். வாழ்வா சாவா
என்ற கேள்வி வரும் அளவு எதையும் ஆழ்ந்து விருப்பப் படாதே. சிறிது
விளையாட்டுத்தனமாகவும் இரு.
விருப்பப் படாதே என்று நான் சொல்லவில்லை. – ஏனெனில்
அந்த ஆவல் உன்னுள் அழுத்தப்பட்டுவிடும், விருப்பம் கொள், ஆனால் அதைப்பற்றி சிறிது
விளையாட்டுத்தனத்தோடு இரு என்றுதான் சொல்கிறேன். கிடைத்தால் நல்லது,
கிடைக்காவிட்டால் பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் . விளையாடுபவர் போல இருந்து பழக வேண்டும்.
நாம் நமது ஆசைகளுடன் ஒன்று பட்டு விடுகிறோம். அது
தடைபடும்போது அல்லது தடுக்கப்படும்போது நமது சக்தியே தீயாகி விடுகிறது. அது உன்னை எரிக்கிறது. அந்த நிலையில் கிட்டதட்ட மனம் தடுமாறிய நிலையில் நீ என்ன
வேண்டுமானாலும் செய்வாய் – பழி வாங்குவதற்காக. உன்னுடைய வாழ்வு முழுவதும்
தொடரக்கூடிய சங்கிலி தொடர் நிகழ்ச்சிகளை அது உருவாக்கும்.
நீ கோபத்தை நிறுத்த முயற்சி செய்யக்கூடாது. நீ செய்யவே
கூடாது. எந்த வகையிலாவது கோபம் கரைந்து போக வேண்டும். இல்லாவிடில் அது உன்னை எரித்துவிடும். உன்னை அழித்துவிடும். நான் சொல்வது என்னவென்றால் அதன் வேர்களுக்கு செல். ஏதோ ஆசை தடைப்பட்டு, நிறைவேறாமல் உள்ளது. அந்த விரக்தி தான் கோபத்தை உண்டாக்குகிறது. இதுதான் அதன் ஆணி வேராக இருக்கும்.
இது ஒருமுறை உன் இருப்பில் உரைத்து விட்டால் பின் எல்லாமும்
ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். கோபம் மறைந்து விடும், அப்படி அது மறைவது உனக்கு ஒரு
புது ஆச்சரியமாக இருக்கும் ஏனெனில் கோபம் மறையும் போது அது அதன்பின் கருணையும்
அன்பும் நட்பும் நிறைந்த அளவற்ற ஆற்றலை விட்டு செல்லும்.
--- ஓஷோ ---

No comments:

Post a Comment