உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்.உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன்.பார்வையும் பார்க்கப்படும் பொருளும் நானாக இருக்கிறேன்.இவ்வளவாக நான் உழைத்துக் கொண்டிருப்பதால் பயம் ஏன்?பயமற்று இருங்கள்!ஏக்கம் ஏன்?எனக்காக ஏங்குங்கள்.பரபரப்பு ஏன்?என் மீதே மிக்க ஆவல் கொள்ளுங்கள்.கவலை ஏன்?எனக்காகவே கவலைப்படுங்கள்.
பரஸ்பர அனுராகத்திலேயே நான் இருக்கிறேன்.ஆத்மார்த்த அன்பு எங்குண்டோ அங்கு நான் இருக்கிறேன்.விசாலமான சிருஷ்டியில் நம்பிக்கையை உதவியாகக் கொண்டு என்னுள் பிரவேசியுங்கள்.-ஸ்ரீ சாயி திருவாய் மொழி
"அவரவர் ப்ராப்த பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று -ரமண மகரிஷி
Sunday, April 20, 2014
கவலை ஏன்
Thursday, April 17, 2014
சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள்.....
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சிலுவையில் மரித்த சம்பவத்தை ‘புனித வெள்ளி’ என்று கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் அனுசரித்து வருகிறார்கள். புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசு சிலுவையில் தொங்கியபோது சொன்ன ஏழு வாசகங்களைக் குறித்து பிரசங்கிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த ஏழு வாசகங்களையும் அதன் அர்த்தங்களையும் கவனிப்போம்.
1 “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியா திருக்கிறார்களே” (லூக்கா 23:34)
ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்று சொல்லி, சுலபமாக நாம் மன்னிப்பதுபோல, இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்துவிட்டார்கள் என்கிறார். அவரது கொலைக்குக் காரணமாக இருந்த ரோம அதிகாரிகளும், யூத மக்களும், அவரை சிலுவையில் அறைந்த போர்ச் சேவகர்களும் எப்படி இதை அறியாமல் செய்திருக்கக்கூடும்? அதுவும் அந்த நாட்டின் மிகக் கொடூரமான குற்றவாளியான பரபாஸ் என்பவனை விடுதலையாக்கி, நன்மைகளை மாத்திரம் செய்துவந்த இவரைக் கொலை செய்தவர்கள் எப்படி அறியாமல் செய்துவிட்டார்கள் என்று சொல்ல முடியும்?
உண்மை என்னவென்றால், அன்றைக்கு நடந்தது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு காரியம். இருளின் சக்திகள் இந்த மனிதருடைய மனக்கண்களைக் குருடாக்கி, இவர்களது இருதயத்தைக் கடினப்படுத்தி, இப்படி ஒரு கொடூரச் செயலைச் செய்ய ஏவின. தங்களுடைய சுயபுத்தியின்படி செயல்படுகிற எவரும் இப்படி ஒரு நல்ல மனிதரைக் கொடூரமாகச் சிலுவையில் அறைய மாட்டார்கள். ஆகவேதான் இயேசு, ‘இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்துவிட்டார்கள்’ என்று சொல்லி மன்னிக்கிறார்.
அது மட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தது என்று வேதம் கூறுகிறது. இவரை சிலுவையில் அறைந்த கைகள் மட்டும்தான் அக்கிரமக்காரரின் கைகள் என்றும், இதற்கான திட்டமும், தீர்மானமும் கடவுளுடையது என்றும் வேதம் கூறுகிறது. மனு வர்க்கத்தின் பாவத்திற்கு இயேசுவைச் சிலுவையில் பலியாக்கக் கடவுள் சித்தம் கொண்டிருந்தார். ஆகவேதான் இந்தச் சம்பவம் நடந்தது.
2 “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலுருப்பாய்” (லூக்கா 23:43)
இரண்டு திருடர்களுக்கிடையே இயேசு சிலுவையில் தொங்கினார். இவர்கள் இருவரும் இரண்டு விதமானவர்கள் என்பதை கவனிக்கவும். அதில் ஒருவன் இந்த நல்லவருக்கு நேர்ந்த கொடுமையைப் பார்த்து, அவர் யார் என்பதையும், இது ஏன் அவருக்குச் சம்பவித்தது என்பதையும் புரிந்துகொண்டு, அவனது மரணத் தறுவாயில் மனம் திரும்புகிறான். இன்னொருவனோ, வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்தது மட்டுமல்லாமல், சாகும்போதும் திருந்தாமல் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக்கொண்டு, “நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்” என்று இகழ்ந்து பேசி, மேலும் குற்றம் செய்கிறான். இதைக் கண்ட அடுத்தவன் இவனைக் கடிந்துகொண்டு, “நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே” என்கிறான்.
அது மட்டுமல்லாமல், “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று இயேசுவிடம் கூறினான். அவனது உள்ளத்தின் எண்ணங்களை இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. தான் பாவி என்றும், சாகும் முன்பு கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் பெற வேண்டும் என்றும் அவன் உணருகிறான். மேலும் இயேசு குற்றவாளியாக மரிக்கவில்லை என்பதையும், மனுக் குலத்தின் பாவத்திற்காக மரிக்கிறார் என்பதையும் இவன் புரிந்துகொண்டான். அது மட்டுமல்லாமல், இவர் இரட்சகர் என்றும், சிலுவையில் மரிக்கிற இவர் ஒருநாள் அரசாளுவார் என்றும், அந்த ராஜ்யத்தில் அவரோடுகூடத் தானும் இருக்க வேண்டுமென்றும் இவன் விரும்புகிறான். இப்படி தன்னுடைய வாழ்க்கையில் திருந்தும்படியாக அவனுக்குக் கொடுக்கப்பட்ட அந்தக் கடைசி வாய்ப்பை இவன் சரியாகப் பயன்படுத்திக் கொண்டான். பாவ மன்னிப்பைப் பெற்று, மோட்சத்திற்குத் தகுதியுள்ளவனாகி விட்டான். இன்னொருவனோ, அவனுக்கு மரணத் தறுவாயில் கொடுக்கப்பட்ட இறுதி வாய்ப்பையும்கூடத் தவற விட்டுவிட்டான்.
இன்றைக்கும் மனிதர்கள் இப்படி இரண்டு விதமாகத்தான் இருக்கிறார்கள் என்பதை இந்த இரண்டு மனிதர்கள் மூலம் காண முடிகிறது. இந்த மனிதர்களுக்கு நடுவேதான் இயேசு சிலுவையில் தொங்கினார்.
3 “இயேசு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்” (யோவான் 19:26-27).
இயேசு பிறப்பதற்கு முன்னரே, இவர் உலக இரட்சகர் என்பதை தேவதூதன் உலகத்திற்கு அறிவித்திருந்தான். மேலும், சிலுவையின் கோர மரணத்தின் மூலமாகத்தான் இவர் உலகத்தை இரட்சிப்பார் என்பதை சிமியோன் என்னும் ஒரு மனுஷன், “உன் ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவிப்போம்” என்று தீர்க்கதரிசனமாக மரியாளுக்கு அறிவித்திருந்தார். இதெல்லாம் அறிந்தவளாகத்தான் இயேசுவின் தாயாகிய மரியாள் சிலுவையின் அருகில் நின்றிருந்தாள். ஆகவேதான் அவள் மார்பில் அடித்துக்கொண்டு ஓலமிட்டு, ஒப்பாரி வைக்கவில்லை.
இயேசுவும் இவைகள் எல்லாம் கடவுளின் சித்தப்படி நடக்கிறது என்பதை நன்கு அறிந்தவராய், அந்த வேதனையின் நேரத்தில்கூடத் தன்னுடைய தாயின் எதிர்காலப் பராமரிப்பிற்குத் தேவையானதைச் செய்தார். சிலுவையில் தொங்கும்போதுகூட, “உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக” என்ற கட்டளையின்படி தன் தாயை யோவானிடத்தில் ஒப்படைத்தார். இது இயேசு கடவுளுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளத் தவறவில்லை என்பதையும், நாமும் நம்முடைய பெற்றோரைக் கனப்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
4 “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்” (மத்தேயு 27:46).
ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்பதற்கு “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அர்த்தமாம்.
நல்ல காரியங்களுக்காக உயிரை விட்ட மகான்கள் தைரியத்தோடும், சந்தோஷத்தோடும் தங்கள் உயிரை விட்டார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. அப்படியானால், இவர் மட்டும் ஏன் இப்படி மிகுந்த சத்தமிட்டுக் கதற வேண்டும் என்றும், கடவுளுடைய சித்தத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு மரிக்க வேண்டியதுதானே என்றும் சிலர் கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால், உலகத்தில் எவரும் இதுவரை இப்படிப்பட்ட ஓர் கோர மரணத்தை அனுபவித்ததில்லை, அனுபவிக்கப் போவதுமில்லை. உலகத்தின் பாவம் முழுவதும் அவர்மீது அன்றைக்கு சுமத்தப்பட்டது. அந்தப் பாவத்திற்கான தண்டனையையும் அவர் தம்மீது ஏற்றுக் கொண்டார். இது எவருமே அறிந்திராத சொல்லொண்ணா வேதனையை அவருக்குத் தந்தது. மேலும் இவர் நித்திய நித்தியமாக கடவுளோடுகூட இருந்த தேவகுமாரன். ஆனால், இவர் மனுக் குலத்தின் பாவத்தை சுமந்தபோது, பாவத்தை நோக்கிப் பார்க்கக்கூடாத சுத்தக் கண்களை உடைய தேவன் இவரிடத்தில் இருந்து தமது முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டியதாயிற்று. இது எல்லா சரீர வேதனையைக் காட்டிலும் மிகப் பெரிய வேதனையை இவருக்கு உண்டாக்கிற்று.
ஆனால் இதன் மூலம் மனுக் குலத்திற்கு மிகப் பெரிய நன்மைகளும் உண்டாயிருக்கிறது. கடவுள் கொடுத்திருக்கிற வாக்குத் தத்தங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மேலான வாக்குத் தத்தம் “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்கிற வாக்குத் தத்தம்தான். நம்மில் ஒருவரையும் கடவுள் கைவிடாமலும், விலகாமலும் இருக்க வேண்டும் என்பதால்தான், இந்த ஒருவர் மீது நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் சுமத்தி, இவரைச் சிலுவையில் அதன் நிமித்தம் கைவிட வேண்டியதாயிற்று. நம்மில் ஒருவரையும் ஒருபோதும் கைவிடாமல் இருப்பதற்காகவே கடவுள் இயேசுவைச் சிலுவையில் கைவிட்டார். தாங்கிக்கொள்ள முடியாத இந்த வேதனையின் காரணமாகத்தான் இயேசு, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கதறினார்.
இதையெல்லாம் அறிந்து கொள்ளாத காரணத்தினால்தான் சிலர் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரால் நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும் என்று கேட்கிறார்கள்.
5 “தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28)
வேத வாக்கியம் நிறைவேறத் தக்கதாக “தாகமாயிருக்கிறேன்” என்றார் என்று யோவான் கூறுகிறார். பழைய ஏற்பாட்டிலே “என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது” (சங்கீதம் 22:15), “என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்” (சங்கீதம் 69:21) என்று சிலுவையைக் குறித்து ஏற்கனவே தீர்க்கதரிசனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த தாகம் சாதாரணமான தாகமல்ல என்றும், அக்கினியின் மத்தியில் இருக்கிற ஒரு மனிதனுக்கு ஏற்படும் மரண தாகம் போன்றது என்றும் வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது இயேசு அனுபவித்த நரக வேதனையைக் குறிக்கிறது. மனிதனுக்காக அவனுடைய நரக வேதனையை இவர் அனுபவித்தார். எந்த ஒரு மனிதனும் ஒருபோதும் நரக வேதனையை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இவர் அந்த வேதனையை ஏற்றுக்கொண்டார். நாம் எல்லோரும் பரலோக இன்பத்தை அனுபவிப்பது மட்டுமே கடவுளுடைய விருப்பம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும் தாகமாக இருந்த அவர் புளித்த காடியைக் குடிக்க வாங்கிக்கொண்டது நம்மீது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சாபங்களை அவர் அகற்றிவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
முன்னோர் செய்த பாவத்தின் பலனை நாங்கள் இன்றைக்கு அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்ட, “பிதாக்கள் திரட்சக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின” என்று அந்தக் காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. இந்த பழமொழி ஒருநாள் இல்லாமல் போகும் என்று பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே கடவுள் சொல்லியிருந்தார்.
6 “முடிந்தது” (யோவான் 19:30)
கிரேக்க மொழியில் ‘டெட்டெலெஸ்டாய்’ (tetelestai) என்ற வார்த்தையைத்தான் தமிழில் ‘முடிந்தது’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் நிலத்தையோ, ஒரு விலையேறப்பெற்ற பொருளையோ வாங்கும்போது, அதற்கான முழுக் கிரயமும் செலுத்தப்பட்டுவிட்டது என்பதைக் காட்ட ‘டெட்டெலெஸ்டாய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி னார்கள். அதாவது, இந்தக் காலத்தில் ரசீதுகளில் ‘PAID’ என்று முத்திரை குத்துவதுபோல, அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். ஆகவே இயேசு சிலுவையில் தொங்கின போது ‘முடிந்தது’ என்று சொன்னது நமது பாவ மன்னிப்பிற்கான முழுக் கிரயத்தையும் அவர் செலுத்திவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
‘முடிந்தது’ என்கிற அந்த ஒரு வார்த்தையில் பல காரியங்கள் அடங்கியிருக்கின்றன.
(i) சிலுவையைக் குறித்து கடவுள் திட்டமிட்டு முன்னறிவித்திருந்த எல்லாம் நிறைவேறி முடிந்தது.
(ii) பழைய ஏற்பாட்டில் அவரு டைய பாடுகளைக் குறித்து சொல்லப்பட்ட அத்தனை காரியங் களும் நிறைவேறி முடிந்தது.
(iii) உலகத்தின் பாவம் தீர்ந்தது, முடிந்தது. அதாவது, பாவம் இனி ஒரு பிரச்சனையல்ல. ஏனென்றால் அதற்குப் பரிகாரம் வந்து விட்டது. எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தீர்வு வந்ததுபோல மனுக் குலத்தின் பாவ வியாதிக்கும் தீர்வு வந்துவிட்டது.
(iv) இயேசு ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பட்ட பாடுகள் முடிந்தது.
(v) இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது.
(vi) மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.
7 “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46)
இயேசு தம் ஜீவன் போகிற வேளையில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு இப்படிச் சொன்னார். இயேசு தம்முடைய பெலன், சக்தி எல்லாவற்றையும் சிலுவையில் இழந்து ஒன்றும் செய்ய இயலாதவராய் மரணம் அடையவில்லை. அதாவது, அவர்கள் அவரைக் கொலை செய்ததினால் அவர் மரிக்கவில்லை. அவர் ஜீவாதிபதி. ஜீவனைக் கொடுக்கிறவர். அவரிடமிருந்து யாரும் ஜீவனை எடுக்க முடியாது. அவரே அதைக் கொடுத்தால்தான் உண்டு. ஆகவே, அவரே அதை ஒப்புக்கொடுக்கிறார். அவர் தலையை சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
பொதுவாகச் சிலுவையில் மரிப்ப வர்கள் உயிர்போகும் நேரத்தில் மூச்சு விட முடியாமல் திணறி, தலையை நன்றாகத் தூக்கி, மூச்சு விட முயற்சிப்பார்களாம். மூச்சு விட முடியாமல், உயிர்போன பிறகு தலை தொங்குமாம். ஆனால் இயேசுவோ, தலையைச் சாய்த்து, பிறகு தம் ஆவியை ஒப்புக்கொடுத்தார். இவர்கள் சாகடித்ததால் அவர் சாகவில்லை. அவரே தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார் என்பதை இது காட்டுகிறது.
இயேசுவின் சிலுவை மரணம் கடவுள் காலகாலமாய்த் திட்டமிட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடப்பித்த ஒரு சரித்திரச் சம்பவம் என்பதை நாம் இன்றைக்கு எண்ணிப் பார்ப்பது அவசியம்.
நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்
என்னை நினைவில் வைத்துக் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, ரயிலோ அல்லது விமானமோ தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Subscribe to:
Posts (Atom)